புதியதாய் திருமணமாகி பூஞ்சோலைக்கு வருகிறாள் எழிலரசி. தன்னுடைய
திருமணத்திற்கு முன், வீட்டின் கழிப்பறையை பயன்படுத்திய எழிலரசிக்கு,
புகுந்த வீட்டில் திறந்தவெளியில் மலம் கழிக்க வேண்டிய சூழல் மிகுந்த மனச்சோர்வைத் தருகிறது.
அம்மாவிடம் தன் சங்கடத்தைச் சொல்கிறாள். அம்மாவிற்கு இதற்கு என்ன தீர்வு என்று புரியவில்லை.
எழிலரசியும், எழிலரசி மாமியார் தனமும் சுய உதவி குழுவின்
கூட்டத்துக்கு விரைந்து செல்கின்றனர்.
தனம்: இதுதான் என் மருமக, இவளையும்
இந்த குழுவுல சேர்த்துக்க முடியுமா?
குழு தலைவி : ஒரு குடும்பத்தைச்
சேர்ந்த ஒருவர் தான் குழுவுல இருக்கனும்.
தனம்: அப்படியா? இது எனக்கு தெரியாதும்மா
குழு தலைவி: ம்ம்… நம்ப
ஊர்ல புதுசா கல்யாணமாகி வந்த சின்னப் பொண்ணுங்க சேர்ந்து குழு தொடங்கனும் சொன்னாங்க. அதுல சேரலாம்.
தனம்: சரிம்மா, ரொம்ப சந்தோஷம்..
எழிலரசி அருகில் அமர்ந்திருந்த அவள் வயதை சேர்ந்த ஒரு பெண்ணிடம்
பேசுகிறாள்.
எழிலரசி: நீங்கலாம் வெளிக்கு எங்கே போவீங்க?
மயில் அக்கா: இந்த பெரும்பாலான
வீடுகள்ல கழிப்பறை வசதி இல்ல. நான் இந்த ஊர்லேயே பிறந்து, வளர்ந்து இந்த ஊர்லயே கல்யாணம்
கட்டியாச்சு. எனக்கு விவரம் தெரிஞ்சு இங்கே காட்டுப்பக்கம் தான் நாங்க போயிட்டு வரோம்.
எழிலரசி: அய்யோ யோ… எப்படி அக்கா, எங்க
அம்மா வீட்டுல கழிப்பறை வசதியிருக்கு. எப்ப வேணுமாலும் பயன்படுத்திக்கலாம். ஆனா இங்க
வந்து எனக்கு காலையில காட்டுப்பக்கம் போகவே ஒருமாதிரி இருக்கு..
மயில் அக்கா: சரிதான்…
எங்களுக்கு பழகிப்போச்சு.. நீ சொல்ற மாதிரி காலையில இல்ல நல்ல இருட்டுக்கு அப்பறம்தான்
நம்பாளல போக முடியும்…
மயில் அக்கா: தனம் அம்மா,
உங்க மருமக இப்பதான் பேசிக்கிட்டு இருந்துச்சு.. நல்ல பொண்ணா இருக்கு.. பாவம் அதுக்கு
காலையில காட்டுப்பக்கம் போகறது சங்கடமா இருக்கறதா சொல்லிச்சு.. நாம தான் பழகிட்டோம்..
இந்தக்காலத்து பொண்ணுங்களுக்கு இதுலாம் சங்கடமா தெரியுது…
தனம், மயில் கூறியதைப்
பற்றி யோசித்துக் கொண்டே மருமகளுடன் வீட்டுக்குப் போகிறாள்.
இரவு உணவுக்கு அனைவரையும் அழைக்கிறார் தனம். அவள் பக்கத்தில்
சாப்பாடு தட்டுடன் எழிலரசி உட்கார்ந்தாள்.
தனம்: நானும் உங்க எல்லார்கிட்டயும்
ரொம்ப வருஷமா ஒரு கழிப்பறை கட்ட சொல்லி கேட்டுட்டு இருக்கேன்.. நீங்க யாரும் காது கொடுத்தே
கேட்காம அலட்சியமா இருக்கீங்க
தனம் கணவர்: என்ன உனக்கு
பிரச்சனை சாப்பிடறப்ப எதைப் பத்தி பேசிட்டு இருக்க?
தனம்: சாப்பிடும் போது தான் இதைப் பத்தி
பேசனும்.. நம்ப வீட்டுக்கு புது பொண்ணு வந்திருக்கு.. அந்தப் பொண்ணுக்கு நாம தான் பொறுப்பு…
மனசுல வச்சுக்கோங்க..
செந்தில்: என்னம்மா, நம்ப அவளை நல்லாத்தானே
வச்சுயிருக்கோம்.. இங்க என்ன குறைச்சல் அவளுக்கு ?
தனம்: அவளுக்கு என்ன வேணும்னு நீ கேட்டிருக்கியா?
கழிப்பறை இல்லாததால, பொண்ணு ரொம்ப கஷ்டப்படுது. அந்தப் பொண்ணு வயசைத் தாண்டி தானே நானும்
வந்திருக்கேன். பொம்பளைக்குத்தான் பொம்பளை மனசு புரியும்
செந்தில்: ( யோசிக்கிறான்) இப்ப அதுக்குன்னு
காசுக்கு என்ன பண்ண முடியும்? அப்பறம் பாத்துக்கலாம் அம்மா.. முதல்ல சாப்பாடு போடுங்க…
தனம்: நான் ஒரு முடிவு எடுத்துட்டேன்,
என்னோட குழுவுல கடன் வாங்கி நம்ப வீட்டுக்கு கழிப்பறை கட்டப் போறேன்.. இவளும் இன்னொரு
குழுவுல சேரப் போறா.. சீக்கிரம் கடனை நாங்களே அடைச்சுடுவோம்.
எழிலரசி மாமியாரைப்
பார்த்து சந்தோஷமாக இருக்கிறாள்.
No comments:
Post a Comment