அனு, முதல்நாள் நடந்த
சம்பவத்தை நினைத்துக் கொண்டிருந்தாள். அவள் படுத்திருந்த அறையில் சிறிய வெளிச்சம் வந்ததைப்
பார்த்து அதிர்ந்து எழுந்தாள். அனு தன் அறையிலிருந்து அம்மாவைத் தேடி ஓடினாள்.
”அம்மா, அம்மா எங்கே
இருக்கீங்க?” என்று கத்திக் கொண்டு அம்மாவை அடுப்படியில் பார்த்து உடனே ஒரு நிமிடம்
சொல்லலாமா, வேண்டாமா என்ற யோசனையுடன் நின்றாள்.
”என்னடி, கத்திக்கிட்ட
வந்த, இப்ப என்ன அப்படியே நிக்குற, என்ன வேணும் சொல்லு”, என்றாள் அம்மா.
அம்மா, நாம தூங்குற
அறையில ஒரு சின்ன வெளிச்சம் வருது, கவனிச்சுங்களா? அதை பார்த்தாலே ஒரு மாதிரி பயமா
இருக்கும்மா. நேத்து நான் காலையில காட்டுப் பக்கம் போனப்ப, யாரோ அந்த இருட்டுல டார்ச்
அடிச்ச மாதிரி இருந்தது. அந்த இருட்டுல ஏதோ வெளிச்சம் தெரிஞ்சது அம்மா. அவசர அவசரமா,
அந்த துளி வெளிச்சத்தைப் பார்த்து நாம வெளியே ஓடனும் இல்ல? ஏன் அம்மா நம்ப வீட்டுல
ஒரு கழிப்பறை கட்டக்கூடாது? என்றாள் அனு.
“ இப்ப என்ன பிரச்சனை,
விடியத்திற்கு முன்னாடியே போக பழக்கிக்கோ, நாங்கெல்லாம், இத்தனை வருஷமா பழகிக்கல,உனக்கு
என்ன? என்று அம்மா அவளை அதட்டினாள்.
“ இல்ல அம்மா, விடியும்
முன்னாடியே போகும் போது, யாராச்சும் நான் போற இடம் பக்கமா வந்தா பயமா தெரியல ஒருமாதிரி
இருக்கு மா. யாரோ டார்ச் அடிக்கிற மாதிரியே இருக்கு எனக்கு. சின்ன வெளிச்சம் கூட எனக்கு
இப்பலாம் பயமா இருக்கு” என்றாள் அனு.
”ஏதாச்சும் சும்மா
கதை சொல்லாம, போய் படிக்கிற வேலையை பாரு.நம்ப ஊர்ல இத்தனை வருஷமா நாங்க பொம்பளைங்க
எல்லாரும் போகிட்டு இருக்கோம், எந்த தப்பும் நடக்கல. கழிப்பறை கட்டறதுலாம் தேவை இல்லாதது”
என்று சொல்லி அனுவை அனுப்பிவிட்டாள்.
”
கழிப்பறை ஏன் அம்மாவுக்கு
முக்கியமாவே படலனே புரியல, நம்ப ஊருல எல்லாரும் இப்படியே வெளியே போய் பழகிட்டாங்க,
ஆனா எனக்கு வெளியே போகறது சுத்தமா பிடிக்கல, யாரச்சும் வந்திடுவாங்களோ, பார்ப்பாங்களோனு
ஒவ்வொரு நாளும் பெரிய அவஸ்த்தையா இருக்கு” என்று மனதிற்குள் பேசிக்கொண்டே தூங்கி விட்டாள்.
கொஞ்ச நாட்களாக அனு
வழக்கம் போல் சரியாக சாப்பிடுவது இல்லை, பள்ளி முடித்து வந்ததும் உறங்கி விடுகிறாள்.
அம்மாவிடம் பிரச்சனையை சொன்னாலும் அதை பெரிதாக பார்க்க போவதில்லை என்று அனு தீர்மானித்து
விட்டாள்.
தன்னுடைய அறையில்
சிறிதாக விழும் வெளிச்சம் மட்டும் அவளை தொந்தரவு செய்கிறது. வெளிச்சத்தை பார்த்தாலே
ஒருமாதிரியான பயம் வருவதை அவள் மெல்ல மெல்ல உணர்கிறாள். காலையில் வழக்கம் போல் காட்டுப்
பக்கம் விடியும் முன்பு போக வேண்டும் என்று நினைக்கும் போது அவள் சாப்பாட்டை அறுவெறுப்பாக
பார்க்க தொடங்குகிறாள். இதனால் அவள் சோர்வாகி பள்ளியிலும் சரியாக பாடத்தை கவனிப்பதில்லை.
அனுவின் வகுப்பாசிரியர்,
அமலா டீச்சர் இவளது நடவடிக்கையை கவனிக்கிறார். அன்று மாலை பள்ளி முடிந்ததும், அனைவரும்
சென்றபின், அனுவை அழைத்து பேசுகிறார்.
“ என்னாச்சு உனக்கு,
கிளாஸ்ல வழக்கம் போல் நீ ஆர்வமா இல்ல, முகமும் ரொம்ப சோர்வா இருக்கு. வீட்டுல ஏதாச்சும்
பிரச்சனையா? என்று கேட்டார்.
அமலா டீச்சர் என்றால்
அனுவுக்கு ரொம்ப பிடிக்கும்.அவரை மாதிரிதான் டீச்சர் ஆக வேண்டும் என்று ஒருமுறை வகுப்பில்
கூறியிருக்கிறாள். அதனால் அமலா டீச்சரிடம் தன்னுடைய மனநிலையை கூற வேண்டும் என்று சொல்ல
தொடங்கினாள்.
“ எனக்கு வீட்டுக்கு
போகவே பிடிக்கல டீச்சர், இப்பலாம் எனக்கு வெளிச்சத்தை பார்த்தாலே பயமா இருக்கு” என்றாள்.
“வெளிச்சத்தைப் பார்த்து
என்ன பயம்? யாராச்சும் உன்னை கிண்டல் பண்றாங்களா? இல்ல வேற எதையோ பார்த்து பயந்திருக்கியானு
சொல்லு” என்றார்.
யாராச்சும் கிண்டல்
பண்ணினா, அதை நேரடியா எதிர்க்கொள்ள முடியும், ஆனா என்ன பிரச்சனைன்னா, காலையில நிலவோட
வெளிச்சத்திலேயே காட்டுப் பக்கம் போகறது, அய்யோ.. வெளிச்சம் வரக்கூடாதுனு நினைச்சு
வீட்டை விட்டு ஓடறது எனக்கு பிடிக்கல டீச்சர்”.
”
காட்டுப்பக்கம் மலம்
கழிக்க போகனுமேனு இப்பலாம் சாப்பாடு கூட எனக்கு இறங்கிறதுல” என்று அழுதுக் கொண்டே அமலா
டீச்சரைப் பார்த்து நின்றாள்.
“நாளைக்கு உன் அம்மாவை
கூட்டிட்டு வா” என்று சொல்லி அனுவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இரவு அம்மா சமையலறையில்
வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவிடம் மெல்லிய குரலில் “ அம்மா நாளைக்கு எங்க
அமலா டீச்சர் உன்னை கூட்டிட்டு வர சொல்லியிருக்காங்க, என் கூடவே வா அம்மா” என்று சொல்லி
அன்று இரவும் சாப்பிடாமல் அடுத்த நாள் விடியலுக்காக காத்துக் கொண்டிருந்தால். இத்தனை
நாட்கள் விடியலை வெறுத்து வந்த அமலாவுக்கு, மறுநாள் ஏதோ புதுசா நடக்க போகுதுனு மனசு
சொல்லுது. இதை நினைத்துக் கொண்டே தூங்கிவிட்டாள்.
காலை பள்ளிக்கு தயாராகி,
அம்மா தயாரா என்பதை அவருடைய சீலை மூலம் கண்டுப்பிடித்து பள்ளிக்கு புறப்பட்டாள்.
அனு, அமலா டீச்சரை
அழைக்க ஸ்டாப் ரூம் பக்கம் சென்றாள். அனுவை பார்த்ததும் அமலா டீச்சர் வெளியே வந்து,
அனுவின் அம்மாவைப் பார்த்து மெல்லியதாய் சிரித்தார்.
“டீச்சர், நீங்க கூப்பிடாத
சொன்னா, அவ வீட்டுல படிக்கிறதே, எப்ப பார்த்தாலும் ரூமுக்கு போய் தூங்கிட்டு இருக்கு.
நீங்க இது சொல்லத்தான் கூப்பிட்டீங்க அப்படினீனா, நல்ல அடிங்க. எனக்கு பிரச்சனை இல்லை.
இந்த பொண்ணு நல்லா படிக்கனும், என்னை மாதிரி இருக்க வேண்டாம் தானே ஸ்கூலுக்கு இவ்வளவு
தொலைவா இருந்தாலும் பரவாயில்லைனு அனுப்பிறேன். இதுலாம் இவங்களுக்கு எங்கே புரியுது?”
என புலம்பி தீர்த்தார் அனுவின் அம்மா.
“அம்மா, கொஞ்சம் பொறுமையா
இருக்கீங்களா? நான் எதுக்கு கூப்பிட்டேனு தெரியாமலேயே உங்க பாட்டுக்கு பேசறீங்க?” என்று
அதட்டல் தொணியில் அமலா டீச்சர் அவரிடம் கேட்டார்.
இல்லம்மா…. என்று
அனுவின் அம்மா அவரை பார்க்க முடியாமல் கீழே குனிந்து விட்டார்.
”
உங்க பொண்ணுக்கு
என்ன பிரச்சனைனு நீங்க கேட்டீங்களா? அவளுக்கு வீடுதான் பிரச்சனை. வீட்டுலிருந்து காட்டுப்பக்கம்
போய் மலம் கழிக்க போகறதை பெரிய அவஸ்தையா பார்க்குறா. அவளை யாராச்சும் பார்த்திட்டா
என்ன பண்றது பயந்து அவ ரொம்ப நாளா சரியா சாப்பிடாம பயந்து சோர்ந்து போயிருக்கா. வீட்டுல
ஒரு கழிப்பறை கட்டனும் உங்ககிட்ட வந்து சொன்னபோது அதை நீங்க அலட்சியப்படுத்தியிருக்கீங்க
இல்லையா?” என்றார் அமலா டீச்சர்.
ஆமா, நான் தான் அதுக்கு
என்ன இப்ப தேவைனு சொன்னேன். நாங்கலாம், இத்தனை வருஷமா போகலயா? பழகிக்கலயா மா? இவளுக்கு
மட்டும் என்ன பிரச்சனை எனக்கு புரியல” என்றார்.
“ உங்கள மாதிரியே
இருக்கனும்னா ஏன் உங்க பொண்ணை ஸ்கூலுக்கு அனுப்பறீங்க? நம்பகிட்ட இருக்கிற பிரச்சனையே
மாறனும் நாம நினைக்கிறதோட அர்த்தம் புரியமா மாறிட்டு வரரதுதான். எது நமக்கு முக்கியம்
தெரியாம, ஒரு ஓட்டம் ஓடிட்டு இருக்கோம். உங்க பொண்ணுக்கு கல்வி முக்கியம் நினைச்சது
நல்ல மாற்றம் தான், ஆனா உறுதுணையா இருக்க வேண்டிய சுகாதாரம், ஆரோக்யம் பத்தி ஏன் நீங்கலாம்
யோசிக்கிறது இல்ல? நம்ப இந்த குழந்தைகளுக்கு எதை கொடுக்கிறோம்? கொஞ்சம் யோசிங்க… அவளோட
தேவையை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க… அம்மாவா இருங்க… உங்க பொண்ணோட சேர்ந்து நீங்களும்
வளரனும். கழிப்பறை ஒன்னு இருந்தா அவளோட மனசு மாற நிறைய வாய்ப்பிருக்கு. படிப்பு கொடுத்தாச்சு
போதும் நினைச்சு நிக்காம, அவளை ஏணியில ஏத்த இன்னும் நீங்க நிறைய மாறனும்” என்று சொல்லி
அனு அம்மாவை அனுப்பி வைத்தார்.
